திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-19 21:00 GMT

திண்டுக்கல், நிலக்கோட்டை பகுதிகளில் கொட்டும் மழையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

அதன்படி, இந்து தர்ம சக்தி அமைப்பு சார்பில் திண்டுக்கல்லில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. நேற்று அந்த சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, திண்டுக்கல் பஸ் நிலையம் அருகில் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. திண்டுக்கல் காமராஜர் சிலை பகுதி, மாநகராட்சி சாலை வழியாக கோட்டை குளம் வரை ஊர்வலம் நடைபெற்றது. அதன்பிறகு விநாயகர் சிலைகள் கோட்டைகுளத்தில் கரைக்கப்பட்டன.

கொட்டும் மழையில்...

இந்து முன்னணி சார்பில் நிலக்கோட்டை, அணைப்பட்டி, விளாம்பட்டி, சிலுக்குவார்பட்டி, தோப்புப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சிறுநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, கொடைரோடு, துரைச்சாமிபுரம் உள்பட 80-க்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று அந்தந்த பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் மினி வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு ஊர்வலமாக நிலக்கோட்டைக்கு வந்தடைந்தன. பின்னர் நிலக்கோட்டை நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. இதற்கு மதுரை கோட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். இதில், இந்து முன்னணி நிர்வாகிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நிலக்கோட்டையில் தொடங்கிய ஊர்வலம் துரைச்சாமிபுரம், முசுவனூத்து, சிறுநாயக்கன்பட்டி வழியாக அணைப்பட்டி வைகை ஆற்று பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின்போது பலத்த மழை பெய்தது. இதனால் கொட்டும் மழையில் நனைந்தபடியே இளைஞர்கள், பொதுமக்கள் ஆட்டம்பாட்டத்துடன் சென்றனர். பின்னர் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.

வத்தலக்குண்டு

இதேபோல் வத்தலக்குண்டுவில் இந்து முன்னணி, பா.ஜ.க. சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து நேற்று இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ், பா.ஜ.க. கூட்டுறவு பிரிவு மாநில பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் தொடங்கியதும், பலத்த மழை பெய்தது. இருப்பினும் இளைஞர்கள், பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர். திண்டுக்கல் சாலை, பெத்தானியாபுரம், காந்திநகர், கடைவீதி, காளியம்மன் கோவில் வழியாக வத்தலக்குண்டு அருகே உள்ள குன்னுவாரன்கோட்டை வைகை ஆறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

வடமதுரை

வடமதுரை, மோர்பட்டி, ரெட்டியபட்டி, பிலாத்து, செங்குறிச்சி மற்றும் அதனைச சுற்றியுள்ள பகுதிகளில் இந்து மக்கள் கட்சி மற்றும் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று வடமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, வடமதுரைக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் வடமதுரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வடமதுரையை அடுத்துள்ள நரிப்பாறை குவாரி குட்டையில் கரைக்கப்பட்டது. 

கன்னிவாடி

இதேபோல் கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆலந்தூரான்பட்டி, தெத்துப்பட்டி, காப்பிளிபட்டி, தருமத்துப்பட்டி, குளத்துப்பட்டி, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வைத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் நேற்று கன்னிவாடிக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் நடந்த ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். இதில், கோவை கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். கன்னிவாடியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், நவாப்பட்டி, மணியகாரன்பட்டி, புதுப்பட்டி வழியாக ஆலந்தூரான்பட்டிக்கு சென்றது. பின்னர் அங்குள்ள மச்சக்குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்