தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 4 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. காசி விசுவநாதர் சுவாமி கோவில் முன்பு இந்து முன்னணி சார்பிலும், கூலக்கடை பஜார் பகுதியில் நகர தலைமை விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு குழு சார்பிலும், செண்பக விநாயகர் கோவில் மற்றும் கீழப்புலியூர் பகுதி ஆகியவற்றில் இருந்து 2 சிலைகளும் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டன. பின்னர் நேற்று மாலை இந்த நான்கு சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் ரத வீதிகளை சுற்றி பின்னர் யானை பாலம் சிற்றாற்றில் நான்கு சிலைகளும் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க., இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.