வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலூர் சில்வர் பீச்சில் கரைப்பு ஆறுகளிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்தி கரைத்தனர்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடலூரில், வீடுகளில் வைத்து பூஜை செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை பொதுமக்கள் சில்வர் பீச்சில் கரைத்தனர். ஆறுகளிலும் வழிபாடு நடத்தி கரைத்து சென்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி பொதுமக்கள் சிறிய அளவிலான களி மண் விநாயகரை வாங்கிச்சென:று வீடுகளில் வைத்து வழிபட்டனர்.
அப்போது விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி, பழ வகைகள் வைத்து வழிபட்டனர். அறுகம்புல் மாலை, எறுக்கன் பூ மாலை, மலர் மாலை அணிவித்தும் விநாயகரை தரிசனம் செய்தனர். கடலூரில் பெரும்பாலான மக்கள் காலை முதலே விநாயகருக்கு படையல் செய்து சாமி கும்பிட்டனர். சிலர் மதியம், மாலை நேரங்களிலும் விநாயகருக்கு படையல் செய்து வழிபட்டனர்.
கடலில் கரைத்தனர்
அவ்வாறு வீடுகளில் வைத்து படையல் செய்து வழிபட்ட சிறிய அளவிலான விநாயகரை மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு சென்று வைத்தனர். சிலர் கடலூர் சில்வர் பீச்சுக்கு கொண்டு சென்றனர். அங்கு விநாயகரை வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு கடலில் கரைத்து விட்டு சென்றனர். இதேபோல் கடலூர் உப்பனாற்றிலும், தென்பெண்ணையாற்றின் கரையோரங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். பின்னர் ஆற்றில் கரைத்து விட்டு சென்றதை பார்க்க முடிந்தது.
சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை கடலூர் சில்வர் பீச்சில் கரைக்க போலீசார் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை. இதனால் அவர்கள் இரு சக்கர வாகனங்களிலும், கார்களிலும் குடும்பத்தோடு வந்து, கடலில் கரைத்து விட்டு சென்றனர். பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நாளை (புதன்கிழமை) கடலில் கரைக்கப்படுகிறது. அப்போதும் வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய சிலைகளை கொண்டு வந்து நீர் நிலைகளில பொதுமக்கள் கரைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.