விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட விநாயகர் சிலைகள் பூம்புகார் கடலில் கரைக்கப்பட்டன.

Update: 2022-09-01 16:54 GMT

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி முக்கிய இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்பட்டன.

சிலைகள் கடலில் கரைப்பு

இந்தநிலையில் பூம்புகார், திருவெண்காடு, சாயாவனம், ஆக்கூர், செம்பனார்கோவில், கருவி, கீழ சட்டநாதபுரம், மங்கைமடம், பல்லவனம், நெய்தவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக டிராக்டர், சரக்கு வாகனம் மற்றும் மாட்டு வண்டிகளில் ஏற்றி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

பின்னர் அந்த சிலைகளை, காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத்தில் இளைஞர்கள் மற்றும் பக்த பிரமுகர்கள் கரைத்தனர். அந்தவகையில் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை வரை கரைக்கப்பட்டதாக தெரிகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொறையாறு

இதேபோல பொறையாறு, எரவாஞ்சேரி, நல்லாடை, இலுப்பூர், சங்கரன்பந்தல், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வீரசோழன் ஆற்றில் கரைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் பிரசார அணி தலைவர் அழகிரிசாமி தலைமையில் கிராம மக்கள் செய்திருந்தனர். ஊர்வலத்தின்போது மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வசந்தராஜ், பழனிச்சாமி, லாமேக் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்