2-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு

Update: 2022-09-04 17:01 GMT

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டத்தில் 2-வது நாளாக விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

சதுர்த்தி விழா

தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொதுமக்கள் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்த சிலைகளுக்கு சிறப்பு பூைஜகள் நடைபெற்றது. சிலைகள் வைத்த 3-வது நாளில் 12,000-க்கும் மேற்பட்ட சிலைகளை பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து சென்று ஒகேனக்கல் காவிரி ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு, இருமத்தூர் ஆறு ஆகிய இடங்களில் கரைத்தனர்.

இந்தநிலையில் 5-வது நாளான நேற்று மாவட்டம் முழுவதும் வைத்து இருந்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ஊர்வலமாக ஒகேனக்கல்லுக்கு எடுத்து வரப்பட்டன. பின்னர் அந்த சிலைகளை முதலைப்பண்ணை காவிரி ஆற்றில் கரைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

சதுர்த்தியையொட்டி வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்க நேற்று கடைசி நாள் என்பதால் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு அருகே உள்ள கல்கூடஅள்ளியில் 11 அடி உயர விநாயகர் சிலை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். 5-ம் நாளான நேற்று சிலையை கிராமமக்கள் டிராக்டரில் ஏற்றி கல்கூடஅள்ளி, மந்தைவெளி, பஸ்நிலையம், தக்காளிமண்டி வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று ஒகேனக்கல் ஆற்றில் கரைத்தனர்.

இதேபோன்று நாகாவதி அணை, தொப்பையாறு, இருமத்தூர் ஆறு ஆகிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை பக்தர்கள் கொண்டு வந்து கரைத்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம்120 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்