சின்னமனூரில் தடையை மீறி வைத்த விநாயகர் சிலை அகற்றம்
சின்னமனூரில் தடையை மீறி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றியபோது, அதன் கிரீடம் மின்கம்பியில் உரசியதில் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சின்னமனூரை அடுத்த சீப்பாலக்கோட்டையில் பால சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் 12 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசாரின் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று காலை சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று முல்லைப்பெரியாற்றில் கரைக்க விழாக்கமிட்டியினர் முடிவு செய்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார், சீப்பாலக்கோட்டைக்கு வந்தனர். அப்போது பால சித்தி விநாயகர் கோவிலில் தடையை மீறி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழாக்கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இருப்பினும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அனுமதி இல்லாமல் சிலையை வைக்கக்கூடாது, ஊர்வலம் செல்லக்கூடாது என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர் அந்த விநாயகர் சிலையை போலீசார் டிராக்டர் மூலம் நகர்ப்பகுதி வழியாக முல்லைப்பெரியாற்றுக்கு கொண்டு சென்றனர். மார்க்கையன்கோட்டை பிரிவு சாலையில் சிலையை கொண்டு சென்றபோது, விநாயகர் சிலையின் மீது எதிர்பாராத விதமாக மின்கம்பி உரசியது. இதில் சிலையின் கிரீடம் சேதம் அடைந்தது. அதைத்தொடர்ந்து உடைந்த கிரீடம் மற்றும் சிலையை முல்லைப்பெரியாற்றுக்கு எடுத்து சென்று கரைத்தனர். இந்த சம்பவத்தால் சின்னமனூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.