திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2022-08-31 18:25 GMT

திண்டுக்கல்லில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

விநாயகர் சதுர்த்தி

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா திண்டுக்கல்லில் இன்று  கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

பகல் 12 மணியளவில் பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் சிறப்பு பூஜை, மின்தேர் வீதிஉலா நடந்தது. பின்னர் இரவு 10 மணியளவில் சிறப்பு மேள கச்சேரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் நாள் முழுவதும் லட்டு, புளியோதரை, சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

108 விநாயகர் கோவில்

அதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகரை சுற்றிலும் 2 ஆயிரம் தென்னை மரக்கன்றுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு 7 மணியளவில் விநாயகரின் தங்கரத உலா நடந்தது. அதன் பிறகு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவிலில் காலை 9 மணியளவில் கணபதி பூஜை, 16 வகையான சிறப்பு அபிஷேகம், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மலர்களால் முத்தங்கி அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

வீடுகளில் வழிபாடு

சாலைரோடு பொதுப்பணி விநாயகர் கோவில், சத்திரம் தெரு செல்வவிநாயகர் கோவில், ரவுண்ட் ரோடு கணபதி கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மேலும் பொதுமக்களும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கிச்சென்று தங்களின் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தினர். அத்துடன் சுண்டல், கொழுக்கட்டை, பழங்கள் உள்ளிட்டவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட்டனர்.

கொடைரோடு

தமிழ்நாடு கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடைரோடு அருகே பள்ளபட்டி தெற்கு தெருவில் விநாயகர் சதுர்த்தி விழா, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விநாயக பெருமானுக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. அதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி பூரண குணமடைந்ததையொட்டி கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. இதற்கு ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். தி.மு.க. நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆகியோர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

தமிழ்நாடு கூட்டுறவு அச்சக பணியாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் சக்கரவர்த்தி வரவேற்றார். தி.மு.க. ஆடுதுறை பேரூர் செயலாளர் இளங்கோவன், நிலக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் தியாகு, தி.மு.க. நிர்வாகி நெடுமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திண்டுக்கல் கூட்டுறவு அச்சகபணியாளர்கள் முன்னேற்ற சங்க தலைவர் பாண்டித்துரை நன்றி கூறினார்.

வத்தலக்குண்டு

வத்தலக்குண்டு அருகே மேலக்கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். தாங்கள் சேர்த்து வைத்த பணத்தில் பூஜை பொருட்களை வாங்கி தங்கள் பகுதியில் வைக்கப்பட்ட சொல்வவிநாயகருக்கு பூஜை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்