திண்டுக்கல்லில் இன்று காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பு

திண்டுக்கல்லில் இன்று நடைபெறும் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.

Update: 2022-11-10 23:41 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகள் உள்பட மொத்தம் 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கு பிரதமர் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.

விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை தாங்குகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஒத்திகை

இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார். பின்னர் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரைக்கு வருகிறார்.

இதற்காக அம்பாத்துரையில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

அதன்பின்னர் அங்கு இருந்து கார் மூலம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு மாலை 5 மணிக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் ஹெலிகாப்டர் இறங்குதளம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு செல்கிறார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி நேற்று முன்தினம் மதுரையில் இருந்து 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் அம்பாத்துரைக்கு இயக்கப்பட்டு ஒத்திகை நடத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்து பல்கலைக்கழகம் வரை பிரதமர் பயணிக்கும் பாதைகளில் கார்கள் மூலம் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. அதேபோல் பல்கலைக்கழகத்தில் இருந்து ஹெலிகாப்டர் இறங்குதளம் வரை மீண்டும் கார் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதற்காக 10 அடிக்கு ஒரு போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

மேலும் பிரதமர், கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், போலீசார் என 4 ஆயிரம் பேர் திண்டுக்கல்லுக்கு வந்துள்ளனர்.

இந்த 4 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி நேற்று காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நேற்று பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. விழா நடைபெறும் இடம், பல்கலைக்கழக வளாகம், ஹெலிகாப்டர் இறங்குதளம், பிரதமரின் கார் வரும் பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

டிரோன்கள் பறக்க தடை

அதேபோல் பல்கலைக்கழகம் அமைந்துள்ள காந்திகிராமம், அம்பாத்துரை, சின்னாளப்பட்டி ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். அதேபோல் மாவட்டம் முழுவதும் 60 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் பாதுகாப்பு கருதி 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. அதேபோல் அம்பாத்துரை, சின்னாளப்பட்டி, காந்திகிராமம், அம்மையநாயக்கனூர், திண்டுக்கல் மாநகராட்சி ஆகிய பகுதிகளில் நேற்று காலை 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகளை நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்