காந்தாரி மிளகாய் விலை வீழ்ச்சி

கூடலூர், பந்தலூரில் காந்தாரி மிளகாய் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2023-09-11 20:15 GMT

கூடலூர்

கூடலூர், பந்தலூரில் காந்தாரி மிளகாய் விலை வீழ்ச்சியால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

விலை வீழ்ச்சி

கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட காந்தாரி என அழைக்கப்படும் சீனி மிளகாய்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இதில் வைட்டமின் சி, ஏ, கே, பொட்டாசியம், வைட்டமின் பி6, பைபர் சத்துகள் உள்ளன. மேலும் நரம்பு, கண், இருதயம், புற்றுநோய், ரத்த கொதிப்பு, வாதம், மூட்டு வலி, காசநோய் உள்பட பல்வேறு நோய்களை தடுக்கிறது. இதனால் காந்தாரி மிளகாய் ஆயுர்வேத மருந்து உற்பத்திக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கிலோ ரூ.700 முதல் ரூ.ஆயிரம் வரை விலை கிடைத்தது. தற்போது கடும் விலை வீழ்ச்சி அடைந்து, கிலோ ரூ.70 மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் கூடலூர், பந்தலூர் பகுதி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள் காந்தாரி மிளகாய் விளைவிப்பதில் ஆர்வம் காட்டி பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

கட்டுப்படியாக வில்லை

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

3 ஆண்டுகளுக்கு முன்பு காந்தாரி மிளகாய் கிலோ ரூ.ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.70 மட்டுமே விலை கிடைக்கிறது. கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தாக உள்ளதால் கேரளா, சென்னை, பெங்களூரு என பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. மிளகாய் பறிக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.100 கூலி கொடுக்க வேண்டும்.

ஆனால், ரூ.70 மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் கூலிக்கு கூட கட்டுப்படியாவது இல்லை. மேலும் காந்தாரி மிளகாய் உரிய காலத்தில் பறித்து விட வேண்டும். இல்லையெனில் அந்த செடி காய்ந்து போய் விடும். எனவே, காந்தாரி மிளகாய்களுக்கு விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்