திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 25-ந்தேதி தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.

Update: 2022-10-13 09:40 GMT

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடைபெறுகிறது.

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபதரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளுவார். அங்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்றையதினம் மாலை 5 மணியில் இருந்து 6.15 மணி வரை சூரியகிரகணம் நடக்கிறது. அதனால் மாலை 4 மணிக்கு சுவாமிக்கு பட்டு சாத்தி நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 6.45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு மற்ற காலங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெறும்.

2-ம் திருவிழா முதல் 5-ம் திருவிழா வரை (26-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை) 4 நாட்கள் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான 6-ம் திருவிழாவான 30-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

அன்று மாலை 4 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ம் திருவிழாவான 31-ந்தேதி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்று வைபவம் நடக்கிறது. தொடர்ந்து இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி (கூடுதல் பொறுப்பு), அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், ராம்தாஸ், கணேசன், செந்தில் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்