கம்பம்மெட்டு சாலையோரம் நிறுத்தப்படும்சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
கம்பம்மெட்டு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்வதற்கு போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி ஆகிய 3 மலைப்பாதைகள் உள்ளன. இதில் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கம்பம்மெட்டு, நெடுங்கண்டம், கட்டப்பனை, இடுக்கி ஆகிய முக்கிய பகுதிகளுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள தோட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கம்பத்தில், கம்பம்மெட்டு சாலை பிரிவில் இருந்து புதுப்பள்ளிவாசல் வரை சாலையின் இருபுறங்களிலும் அரிசி, மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் உள்ளன.
இதனால் இந்த கடைகளுக்கு பகல் நேரத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க வரும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த சாலையில் பகல் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படும் சரக்கு வாகன டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.