ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகை
சென்னையில் நடைபெறும் ஜி20 மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் நேற்று சுற்றுலாத்துறை ஏற்பாட்டின் பேரில் மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்தனர்.
மாமல்லபுரம்,
மத்திய அரசு சார்பில் சென்னையில் பேரிடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த ஜி20 மாநாடு 6 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த பெண் பிரதிநிதிகள் 400 பேர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டு பிரதிநிதிகள் 130 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க தமிழக சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து இருந்தது.
ரசித்து பார்த்தனர்
நேற்று புராதன சின்னங்களை சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் தமிழ் கலாசாரப்படி கடற்கரை கோவில் பகுதியில் மாலை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் ரசித்து பார்த்தனர். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டனர்.
கடற்கரை கோவில் சிற்பங்கள் முன்பு வெளிநாட்டு பிரதிநிதிகள் விதவிதமான கோணங்களில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.