செல்போனில் தவறான தகவல் அனுப்பியதால் ஆத்திரம்: சுமைதூக்கும் தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி -வாலிபர் கைது-சகோதரருக்கு வலைவீச்சு
சுமைதூக்கும் தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுமைதூக்கும் தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது சகோதரரை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்லால் தாக்குதல்
மதுரை செல்லூர் கீழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் நிதிஷ்குமார்(வயது 23), அவரது சகோதரர் சஞ்சய்குமார்(21). இருவரும் பரவை மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளனர். இவர்களுடன் செல்லூர் தத்தனேரி களத்துபொட்டல் பகுதியை சேர்ந்த யோவான்(35) என்பவர் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் சஞ்சய்குமாருக்கு போன் செய்துள்ளார்.
அப்போது அவர் தூங்கி கொண்டிருப்பதாக வீட்டில் இருந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். அதன்பின்னர் யோவான் அந்த செல்போன் எண்ணிற்கு தகாத செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சகோதரர்கள் ஆத்திரம் அடைந்தனர். நேற்று காலை இருவரும் மார்க்கெட்டிற்கு வேலைக்கு சென்றனர். அங்கு யோவானை பார்த்து சம்பவம் குறித்து கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
கைது
இதில் ஆத்திரம் அடைந்த சகோதரர்கள் இருவரும் சேர்ந்து யோவானை சரமாரியாக கல்லால் முகத்தில் தாக்கினர். சம்பவத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் சம்பவம் குறித்து சகோதரர்கள் மீது கூடல்புதூர் இன்ஸ்பெக்டர் மதுரைவீரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் பதுங்கியிருந்த சஞ்சய்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற நிதிஷ்குமாரை தேடி வருகிறார்கள்.