நெல்லை - சென்னை சிறப்பு ரெயில் சேவை மேலும் நீட்டிப்பு
நெல்லை - சென்னை சிறப்பு ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை,
நெல்லை - சென்னை எழும்பூர் இடையே வியாழன் தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வியாழன் தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் காலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, மறுதினம் சனிக்கிழமை நெல்லைக்கு காலை 7.10 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில்களின் சேவைகள் இருமார்க்கத்திலும் நேற்றோடு நிறைவு பெற்றன.
இந்நிலையில் இந்த ரெயில் சேவைகள் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து வரும் 6ம் தேதி வியாழன் முதல் 27ம் தேதி வரை 4 சேவைகளும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து வரும் 7ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை 4 சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட மற்றொரு சிறப்பு ரெயிலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. முன்பு கேரள மார்க்கமாக இயங்கிய இந்த ரெயில், தற்போது தமிழகம் வழியாக இயக்கப்பட உள்ளது. நெல்லை வழியாக இரு சிறப்பு ரெயில்கள் இம்மாதத்தில் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்