தமிழ்நாட்டில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி

தமிழ்நாட்டில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2023-09-26 21:00 GMT

தமிழ்நாட்டில் முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக அரசு அறிவிப்பு

உடல் உறுப்புகள் தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள், இனி வரும் காலங்களில் அரசு முழு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ந் தேதி அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தில் முதல் முறையாக உடல் உறுப்புகளை தானம் செய்த தேனி வருவாய் அதிகாரியின் இறுதிச்சடங்கு நேற்று அரசு முழு மரியாதையுடன் நடைபெற்று, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

தேனி வருவாய் அதிகாரி

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 37). இவர், தேனி கலெக்டர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 23-ந் தேதி மாலை வடிவேல் வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தேனியில் இருந்து சின்னமனூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். சீலையம்பட்டி அருகில் அவர் வந்தபோது, சாலையின் குறுக்கே மாடு வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாட்டின் மீது வடிவேலின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது தலையில் பலத்த காயமடைந்த வடிவேல் உயிருக்கு போராடினார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வடிவேல் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வடிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

உடல் உறுப்புகள் தானம்

இந்தநிலையில் விபத்தில் சிக்கிய வடிவேல் நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் கலந்து பேசி, வடிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து வடிவேலின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம், தோல் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டு, அதே மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்றத்திற்காக காத்திருந்தவர்களுக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் காத்திருந்தவர்களுக்கும் பொருத்தப்பட்டது. இந்த தகவலை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

அமைச்சர் மரியாதை

அதன்பிறகு வடிவேலின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சின்னமனூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு வடிவேல் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் தமிழக அரசு அறிவிப்பின்படி, உடல் உறுப்புகளை தானம் செய்த வடிவேலின் இறுதிச்சடங்கு அரசு முழு மரியாதையுடன் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வந்து, வடிவேலின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த இறுதிச்சடங்கில் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சரவணன், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கதமிழ்செல்வன், சின்னமனூர் நகராட்சி தலைவர் அய்யம்மாள் ராமு, ஒன்றியக்குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை உள்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வடிவேலின் உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்