மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செயல்படுத்தப்படவில்லை

மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செயல்படுத்தப்படவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2023-09-22 18:45 GMT

நாகர்கோவில்:

மீனவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக செயல்படுத்தப்படவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி மீனவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் உதவி கலெக்டர் (பத்மநாபபுரம்) கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்து பேசியதாவது:-

மீனவர் நலத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்

பி.எம்.கிசான் திட்டத்தில் ஒவ்வொரு மீனவ கிராமத்தில் இருந்தும் சேர்க்கப்பட்ட மீனவர்கள் சுமார் 50 பேர் முதல் 100 பேர் மீண்டும் மீனவர்கள் நலத்திட்டத்தில் இணைய விரும்பி, பி.எம்.கிசான் திட்டத்தில் இருந்து விலகி தடையில்லா சான்று வாங்கிய பிறகும் அவர்கள் மீனவர்கள் நலத்திட்டங்களில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்கள். இதனால் மற்ற மீனவர்களுக்கு கிடைக்கும் நல உதவிகள் அவர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது.

எனவே அவர்களை விரைவாக மீனவர் நலத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் விடுபட்ட கிராமங்களை சேர்க்க வேண்டும். அதன்பிறகுதான் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும். விடுபட்ட கிராமங்களை சேர்க்காமல் பசுமை தீர்ப்பாயத்தை சரிக்கட்டும் முயற்சியில் அரசு ஈடுபடுவது சரியானது அல்ல. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடைக்கால நிவாரணம்

தமிழக அரசு மீனவர்களுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. ஆனால் அந்த நிதியை முறையாக செயல்படுத்தாததால் மிகப் பெரிய ஆபத்து ஏற்படுகிறது. கோவளத்தில் தற்போது தூண்டில் வளைவு அமைக்க ரூ.17 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த தூண்டில் வளைவை நேராக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஆனால் வளைத்து தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால் மீனவர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது. எனவே அந்த தூண்டில் வளைவு பணியை நிறுத்துவதுடன் நேராக தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் பேசும்போது, கோவளம் பகுதியில் தூண்டில் விளைவு அமைப்பதற்கு ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. தூண்டில் வளைவு பணியை நீட்டிக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மறு திட்ட மதிப்பீடு தயாரித்து தான் அந்த பணியை மேற்கொள்ள முடியும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்