கொடைக்கானலில் சாலைகளை சீரமைக்க ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு; நகராட்சி தலைவர் தகவல்

கொடைக்கானலில் சாலைகளை சீரமைக்க ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக நகராட்சி தலைவர் செல்லத்துரை கூறினார்.

Update: 2023-06-16 21:00 GMT

கொடைக்கானலில் சாலைகளை சீரமைக்க ரூ.3½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து இருப்பதாக நகராட்சி தலைவர் செல்லத்துரை கூறினார்.

நகராட்சி கூட்டம்

கொடைக்கானல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாயக்கண்ணன் முன்னிலை வகித்தார். ஆணையர் சத்யநாராயணன் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு:-

மோகன் (தி.மு.க.):- குப்பைகளை அகற்ற போதுமான வாகனங்கள் இல்லை. மேலும் குப்பைகளை வாகனங்களில் கொண்டு செல்லும்போது அவை சாலையில் விழுகின்றன. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:- புதிதாக 7 வாகனங்கள் வாங்கப்பட உள்ளது. அதில் குப்பைகளை அகற்றுவதற்கும், கழிவுநீர் அகற்றவும் வாகனங்கள் வாங்கப்படுகிறது. குப்பைகள் அகற்றும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. வரும் காலத்தில் குப்பை இல்லா நகரமாக மாற்றப்படும்.

ரூ.3 கோடி ஒதுக்கீடு

இருதயராஜா (அ.தி.மு.க.):- சலேத் மாதா கோவிலுக்கு செல்லும் சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

தலைவர்:- சுங்கவரி நிதியின் மூலம் நகரில் உள்ள பல்வேறு சாலைகளை சீரமைக்க ரூ.3 கோடியே 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சலேத் மாதா கோவில் அமைந்துள்ள செயின்ட்மேரீஸ் சாலை சீரமைக்க சுமார் ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அப்பாஸ் (தி.மு.க.):- அண்ணாசாலையில் புதிய மார்க்கெட் கட்டிடம் கட்டிடத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்க வேண்டும். மேலும் அந்த கட்டிடத்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

தலைவர்:- அண்ணாசாலையில் தனியாக மின்சார டிரான்ஸ்பார்ம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய கலைக்கல்லூரி

போஸ் ஜெகநாதன் (சுயே):- கிராம பகுதிகளில் உள்ள குப்பைகளை சின்னப்பள்ளம் செல்லும் சாலையில தண்ணீர் தொட்டி அருகே கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

தலைவர்:- நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதி பெறாத தங்கும் விடுதிகளில் இருந்து குப்பைகளை பல்வேறு இடங்களில் கொட்டி செல்கின்றனர். எனவே இதனை வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அனுமதி பெறாத தங்கும் விடுதிகள் 'சீல்' வைக்கப்படும்.

இருதயராஜா (அ.தி.மு.க.):- கொடைக்கானலில் உள்ள மாணவர்களுக்கு கலைக்கல்லூரி இல்லாததால் வெளியூர்களுக்கு சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாணவர்களுக்கு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்:- இதற்காக பழனி தொகுதி இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். விரைவில் புதிய கலைக்கல்லூரி திறக்கப்படும்.

உரிமையாளர்களுக்கு அபராதம்

துணைத்தலைவர்:- நகர் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகர்நல அலுவலர்:- ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து, நகர்ப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கூட்டத்தில் தனிதீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

நித்யா (அ.தி.மு.க.):- வனத்துறைக்கு சொந்தமான பியர்சோலா அருவியை பார்வையிட சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்.

தலைவர்:- இதுகுறித்து வனத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அருவி பகுதியில் வாகனங்கள் சென்று திரும்பி வர முடியாத நிலை இருக்கிறது. அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேற்கண்டவாறு பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது. முடிவில் நகராட்சி ெபாறியாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்