நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மோகனூர்:
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழக சுகாதார துறை சார்பில் தொழுநோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தினி (தொழுநோய்) கலந்து கொண்டு தொழுநோயின் அறிகுறிகள், ஆரம்பகால சிகிச்சை முறைகள், தொழுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொழுநோய் பாதித்தவர்கள் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். மேலும் தொழுநோய் குறித்து மணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு, பதிலளித்து பேசினார். தொடர்ந்து தொழுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகளுக்கு தோல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட சுகாதார துறையை சேர்ந்த திருப்பதி, வெங்கடாசலபதி, புவனேஸ்வரன், செல்வராஜா, வேல்முருகன் மற்றும் பழனிச்சாமி மற்றும் கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், செஞ்சுருள் சங்கம், செஞ்சிலுவை சங்க மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வெஸ்லி மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.