கோரக்க சித்தர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு
வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
வடக்கு பொய்கை நல்லூர் கோரக்க சித்தர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
18 சித்தர்களில் ஒருவர்
தமிழக சித்த பரம்பரையில் நவநாத சித்தர்களில் ஒருவராகவும், முதன்மையான 18 சித்தர்களில் ஒருவராகவும் விளங்குபவர் கோரக்க சித்தர். போகரின் ஆலோசனைப்படி, நாகை அருகே வடக்குப் பொய்கைநல்லூரில் தவமிருந்து வந்த கோரக்கர், ஐப்பசி பரணி நட்சத்திர தினத்தன்று ஜீவ சமாதி அடைந்தார் என்பது சித்தர் வரலாறு.
இங்கு வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர். அதேபோல சிவனடியார்கள், சாதுக்கள் பெரும்பாலானோர் நடைபயணமாக வந்து செல்கின்றனர்.
பவுர்ணமி
பொதுவாக பவுர்ணமி நாட்களில் இந்த ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதிலும் ஆடி மாதம் வரும் பவுர்ணமி நாளில் இங்கு நடைபெறும் வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இந்த நிலையில் ஆடி பவுர்ணமி நாளான நேற்று முன்தினம் கோரக்க சித்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் சித்தர் ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஆன்மிக பட்டிமன்றமும் நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.