போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க முழுஒத்துழைப்பு வழங்க வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்ர் ஷ்ரவன் குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்

Update: 2022-08-13 16:36 GMT

கள்ளக்குறிச்சி

விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஏ.கே.டி.பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:-

ஒரு வார காலத்துக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போதைபொருள் பயன்படுத்துவதை தவிர்ப்பது தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒருவார காலத்துக்கு நடத்தப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் அன்றாட பழக்க வழக்கத்தை கண்காணித்து நட்பு ரீதியாக பழகி நல்ஒழுக்கங்களை கற்றுத்தர வேண்டும். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களின் அன்றாட செயல்களை கண்காணித்து அவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத்தர வேண்டும்.

ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளித்தால் போதைப் பொருள் பழக்கத்தை முழுவதுமாக இம்மாவட்டத்திலிருந்து ஒழித்திட முடியும். போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறையினருக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் போதைபொருள் தடுப்புக்கெதிரான பல்வேறு கலைநிகழ்ச்சிகள் வாயிலாக பொதுமக்களுக்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சுரேஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவஹர்லால், விஜயகார்த்திக்ராஜ், கோட்டாட்சியர் பவித்ரா, உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேசன், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்