பிறந்தநாள் அன்றும் கணவர் மதுக்குடித்ததால் விரக்தி:தீக்குளித்து பெண் தற்கொலை

பிறந்தநாள் அன்றும் கணவர் மதுக்குடித்து வந்த தால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-18 19:00 GMT


கிணத்துக்கடவு


பிறந்தநாள் அன்றும் கணவர் மதுக்குடித்து வந்த தால் விரக்தியில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.


இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


மதுக்குடிப்பதால் தகராறு


பொள்ளாச்சி அருகே உள்ள டி.நல்லி கவுண்டன்பாளையம் அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி ரங்கநாயகி (வயது 47). இவர்களுக்கு மகேஸ்வரி (28) என்ற ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தார். இவருக்கும் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதுரை சேர்ந்த சரவணக்குமார் (31) என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.


சரவணகுமார் திருமணத்துக்குப் பிறகு சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு மகேஸ்வரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனை மகேஸ்வரியின் தாயார் ரங்கநாயகி கண்டித்துள்ளார். கடந்த 17-ந் தேதி காலை மீண்டும் சரவணக் குமாருக்கும், மகேஸ்வரிக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் சரவணக்குமாருக்கு அன்று பிறந்தநாள் என்றும் கூறப்படுகிறது. இந்த நாளிலும் அவர் மதுக்குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது மகேஸ்வரி, சரவணக்குமாரிடம் தினம் குடித்துவிட்டு வந்தால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என கூறியுள்ளார்.


தீக்குளித்து தற்கொலை


இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மகேஸ்வரி வீட்டிலிருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் அவர் வலியால் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு ஓடோடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் மகேஷ்வரி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


கிணத்துக்கடவு அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்