தமிழக- கர்நாடக மாநில எல்லையில் சாலையோர கடைகளில் பலா பழங்கள் விற்பனை அமோகம்
தமிழக- கர்நாடக மாநில எல்லையில் சாலையோர கடைகளில் பலா பழங்கள் விற்பனை அமோகம்
தாளவாடி
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி வழியாக திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக தாளவாடி மலைப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்தவாறு செல்கின்றனர். மேலும் தற்போது பலா பழம் சீசன் என்பதால் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் பலா பழங்கள் விளைச்சல் அதிகமாக உள்ளது.
இதனால் தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள புளிஞ்சூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு அதில் பலா பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், இங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பலா பழங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பலா பழம் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.