பசுமை போர்த்திய புல்வெளி மீது வெள்ளைக்கம்பளம் விரித்த உறைபனி

கொடைக்கானலில், பசுமை போர்த்திய புல்வெளி மீது வெள்ளைக்கம்பளம் விரித்து உறைபனி ஆக்கிரமித்துள்ளது.

Update: 2023-02-18 16:31 GMT

வாட்டி வதைத்த குளிர்

'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக உறைபனி சற்று தாமதமாக தொடங்கியது. இருப்பினும், பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு சில நாட்களும், ஜனவரி மாதத்தில் 15 நாட்கள் வரை தொடர்ந்தும் கொடைக்கானலை உறைபனி ஆக்கிரமித்து இருந்தது. அதன்பிறகு ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் ஒரு சில நாட்கள் மழை பெய்தது.

இதன் எதிரொலியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உறைபனி இல்லாமல் கடும் குளிர் வாட்டியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஆனால் இரவில் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் வரை நிலவியதால் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் குளிர் நிலவியது.

அதேநேரத்தில் நேற்று அதிகாலையில் கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில், 7 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வெப்ப நிலை காணப்பட்டது. இதனால் கடும் குளிர் வாட்டியது.

வெள்ளைக்கம்பளம் விரித்தாற்போல...

இதுமட்டுமின்றி மரம், செடி, கொடிகள், புற்களின் மேல் விழுந்த நீர்ப்பனித்துளிகள் உறைபனியாக மாறியது. அதன்படி கொடைக்கானல் நீர்பிடிப்பு பகுதியான ஜிம்கானா, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல் அரசு விளையாட்டு மைதானம், ஆற்றுக்கரையோரம் உள்ளிட்ட பகுதிகளை உறைபனி ஆக்கிரமித்தது.

குறிப்பாக பசுமை போர்த்திய புல்வெளி மீது வெள்ளைக்கம்பளம் விரித்தாற்போல உறைபனி படர்ந்திருந்தது. பகலவனின் பார்வை பட்டவுடன் செடி, கொடி, புல்வெளியை ஆக்கிரமித்திருந்த உறைபனி மெல்ல மெல்ல அகன்று விட்டது.

இதேபோல் கொடைக்கானல் நட்சத்திர ஏரியின் தண்ணீரில் பரவி இருந்த உறைபனி, ஆதவனின் முகத்தை பார்த்தவுடன் ஆவியாகி விட்டது. இந்த காட்சி, சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது.

சுற்றுலா பயணிகள் அவதி

கொடைக்கானலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் மீதும் உறைபனி படர்ந்திருந்தது. உறைபனியின் தாக்கத்தினால் நிலவும் கடும் குளிருக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள், கொடைக்கானல்வாசிகள் அவதிப்பட்டனர். குளிரை சமாளிக்கும் வகையில் அவர்கள், பகல் நேரத்திலேயே குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்து பவனி வந்த காட்சியை பார்க்க முடிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்