இன்று முதல் மே 31-ந் தேதி வரை பவானிசாகர் அணையில் அதிகபட்சமாக 105 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்கப்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

பவானிசாகர் அணை

Update: 2022-10-31 19:30 GMT

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மே 31-ந் தேதி வரை பவானிசாகர் அணையில் அதிகபட்ச அளவான 105 அடியை தொடும் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் பவானிசாகர் அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக 5 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் 9 மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் வரத்து குறைந்தது

அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு மழை குறைந்து வருவதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரிநீராக 800 கன அடி தண்ணீரும், பாசனத்துக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் கிளை வாய்க்கால் பழுதால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஆயிரத்து 300 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடியும், பாசனத்துக்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் கிளை வாய்க்கால் பழுதால் தண்ணீர் திறக்கப்படவில்லை. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாகவே இருந்தது.

105 அடி தேக்கப்படும்

பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறையினர் வகுத்து வைக்கப்பட்டுள்ள விதியின்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் அக்டோபர் மாதம் இறுதிவரை 102 அடி வரை மட்டுமே தேக்கி வைக்க வேண்டும். நவம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து அணையின் அதிகபட்ச நீர்ப்பிடிப்பாக 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அதாவது நவம்பர் 1-ந் தேதி தொடக்கமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மே மாதம் 31-ந் தேதி வரை அணையில் அதிகபட்சமாக 105 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்