தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார் மீண்டும் சிறையில் அடைப்பு

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-05-28 11:50 GMT

சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டையை சேர்ந்த மதக்கருப்பு மகன் மனோஜ்குமார் (வயது 19). இவர் தன்னை காதலிக்க மறுத்த 16 வயது சிறுமியை கத்தியால் தாக்கிய வழக்கில் பழனிசெட்டிபட்டி போலீசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று 2 போலீசாரால் அழைத்து வரப்பட்டார். அங்கு சிகிச்சை முடிந்து திரும்பும் போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்து மனோஜ்குமார் தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் கம்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை ஆண்டிப்பட்டி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, மீண்டும் தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர்.

தப்பி ஓடிய கைதியை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார். அதேநேரத்தில் கைதியை தப்பவிட்ட போலீஸ்காரர்கள் 2 பேர் மீதும் கவனக்குறைவாக செயல்பட்டதால் துறைவாரியான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்