தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்
தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் சிக்கினார்.
தாளவாடி
தமிழக கர்நாடக எல்லையில் தாளவாடி அடுத்துள்ள எத்திகட்டை பகுதி வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் நேற்று காலை எத்திகட்டை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து வேனை ஓட்டி வந்தவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் தாளவாடியை அடுத்த காமையன்புரம் பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (வயது 40) என்பவர் என்றும், தாளவாடியில் இருந்து கர்நாடகாவுக்கு அவர் ரேஷன் அரிசி கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெங்கட்ராஜை கைது செய்து, 1,500 கிலோ ரேஷன் அரிசியையும், வேனையும் பறிமுதல் செய்தார்கள்.