முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரைச்சல் பாலம் வழியாக அதிக நீர் எடுக்க அதிகாரிகள் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இரைச்சல் பாலம் வழியாக அதிக தண்ணீர் எடுப்பது தொடர்பாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரைச்சல் பாலம்
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்க சுரங்கம் அமைத்து, தேக்கடியில் மதகு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மதகு வழியாக வரும் தண்ணீரை தமிழகத்துக்கு இரைச்சல் பாலம் வழியாகவும், மின் உற்பத்திக்கு ராட்சத குழாய்கள் வழியாகவும் பிரித்து அனுப்புவதற்கு குமுளி வனப்பகுதியில் 'போர்பே டேம்' என்ற சிறிய அணை உள்ளது. இந்த அணை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மதுரை மண்டல நீர்வளத்துறை ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வைத் தொடர்ந்து இரைச்சல் பாலம் வழியாக அதிகபட்சம் எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்லலாம் என்பதை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது, இரைச்சல் பாலம் வழியாக அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் தமிழக பகுதிக்கு கொண்டு செல்லலாம் என்பதை மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு தொடங்கியது. முல்லைப்பெரியாறு அணையின் செயற்பொறியாளர் சாம்இர்வின் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. ஆய்வில், உதவி செயற்பொறியாளர் குமார், தொழில்நுட்ப உதவியாளர் பாலமுருகன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆய்வு அறிக்கை விரைவில் மண்டல தலைமை பொறியாளருக்கு சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.