மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாகதிருச்செந்தூருக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும்-தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு மனு
மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டு உள்ளது.
திருச்செந்தூர் ரெயில்
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பழனி, திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் பொள்ளாச்சியில் இருந்து நின்று கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதற்கிடையில் இந்த ரெயிலை பிடிப்பதற்கு கிணத்துக்கடவு, போத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பஸ் பிடித்து பொள்ளாச்சிக்கு வந்து, பஸ் நிலையத்தில் இருந்து மற்றொரு பஸ்சில் ரெயில் நிலையம் செல்வதற்குள் ரெயிலை தவற விடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இந்த நிலையில் ரெயில் பயணிகள் சங்கத்தினர் (வார்ப்) தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். அதில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரெயில் இயக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரெயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது:-
அதிக வருவாய்
பொள்ளாச்சி-போத்தனூர் பாதை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டு பிறகு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் ரெயில்களை இயக்க மதுரை, பாலக்காடு, சேலம் கோட்டத்தின் அனுமதியை பெற வேண்டிய உள்ளது. இதற்கிடையில் தற்போது பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலியாக வரும்ரெயில் பொள்ளாச்சிக்கு வந்ததும் நிரம்பி விடுகிறது.
இதற்கிடையில் இரவு நேரங்களில் ரெயில் வசதி இல்லாததால் கூடுதல் கட்டணம் கொடுத்து தென்மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது உள்ளது. மேலும் பகல் ரெயிலில் திருச்செந்தூர் செல்வதால் 2 நாட்கள் ரெயிலில் பொழுதை கழிக்க வேண்டியது உள்ளது. ஏற்கனவே திருச்செந்தூருக்கு ரெயிலுக்கு இணைப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே தென்மாவட்ட மக்கள், பக்தர்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு தினசரி இரவு நேர ரெயில் முன்பதிவு வசதியுடன் இயக்க வேண்டும். இதன் மூலம் ரெயில்வேக்கு அதிக வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.