கேரளாவில் இருந்து ஜீப்களில் கடத்திய ரூ.16 லட்சம்ஏலக்காய் பறிமுதல்:ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடவடிக்கை
கேரளாவில் இருந்து போடிக்கு 3 ஜீப்களில் கடத்தி வந்த ரூ.16 லட்சம் மதிப்புள்ள ஏலக்காய் மூட்டைகளை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஏலக்காய் கடத்தல்
கேரள மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு வரி செலுத்தாமல் ஏலக்காய் கடத்தி வரப்படுவதாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில், ஏலக்காய் கடத்தலை தடுக்கும் வகையில் போடி அருகே போடிமெட்டு சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நேற்று திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
துணை மாநில வரி அலுவலர்கள் கனகராஜ், பாக்கியலட்சுமி ஆகியோர் தலைமையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 ஜீப்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஜீப்களில் 23 மூட்டைகளில் 900 கிலோ ஏலக்காய்கள் இருந்தன. அவற்றுக்கு முறையான ஆவணங்கள் இல்லை. விசாரணையில் அந்த 3 ஜீப்களிலும், கேரள மாநிலத்தில் இருந்து போடிக்கு முறையாக வரி செலுத்தாமல் ஏலக்காய் மூட்டைகளை கடத்தி வந்ததாக தெரியவந்தது.
ரூ.16 லட்சம் ஏலக்காய் பறிமுதல்
இதையடுத்து அந்த 3 ஜீப்களிலும் இருந்த சுமார் ரூ.16 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகளையும், கடத்த பயன்படுத்திய 3 ஜீப்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை தேனி வணிகவரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
மேலும் விசாரணையில் வியாபாரிகளான தேனி மாவட்டம் போடிமெட்டுவை சேர்ந்த சுரேஷ், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ராஜகுமாரியை சேர்ந்த பேசில்ஐசக் ஆகியோர் இந்த ஏலக்காய்களை கடத்தி வந்ததாக தெரியவந்தது. அந்த 2 வியாபாரிகளுக்கும் மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.