பட்டாசு முதல் பலகார பொருட்கள் வரை விலை உயர்ந்ததால் பரிதவிக்கும் மக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு முதல் பலகார பொருட்கள் வரை விலை உயர்ந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2022-10-19 17:02 GMT

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தல் முக்கியமானது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விதவிதமான ஆடைகளை வாங்கி அணிவது வழக்கம். மேலும் சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களுக்கு பட்டாசு வெடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.

பலவித பலகாரங்கள்

இதேபோல் வீடுகளில் பலகாரம் தயாரிப்பு மற்றொரு முக்கிய அம்சமாகும். நாகரிகம் கருதி கடைகளில் விதவிதமான சுவைகளில் மிட்டாய் வாங்கினாலும், வீடுகளில் தயாரிக்கும் பலகாரங்கள் சிறப்பானவை. நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் வீடுகள் தோறும் தீபாவளிக்கு பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. முறுக்கு, அச்சு முறுக்கு, அதிரசம், பனியாரம் என தீபாவளி பலகாரங்களின் பட்டியல் ரொம்ப நீளம் தான். இதற்காக தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பே வீடுகளில் பலகாரம் தயாரிக்க ஆயத்தமாகி விடுகின்றனர்.

வெல்லம், பச்சரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே வாங்கி தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பே பலகார தயாரிப்பு பணியில் பெண்கள் ஈடுபடுவார்கள். இதனால் தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடைகள், பட்டாசு, பலகாரத்துக்கு தேவையான பச்சரிசி, பருப்பு வகைகள், வெல்லம், எண்ணெய் போன்றவற்றின் விற்பனை படுஜோராக நடப்பது வழக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், மளிகை கடைகள், எண்ணெய் கடைகளுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி விட்டனர். புதிய மாடல்களில் ஆடைகள், பலவித பட்டாசுகள், பலகார பொருட்கள் உள்பட தீபாவளி கொண்டாட்டத்துக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வருகின்றனர்.

விலை உயர்வு

ஆடைகளை பொறுத்தவரை ரெடிமேட் ஆடைகளை மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வேட்டி, சேலை வாங்குகின்றனர். மற்ற வயதினர் அனைவரும் நாகரிக உடைகளை தேர்வு செய்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், ஆடைகளின் விலை கடுமையாக உயர்ந்து விட்டதாக மக்கள் புலம்புகின்றனர்.

அதிலும் சிறுவர்கள், பெண்களுக்கான ஆடைகள் விலை மிகவும் அதிகம் என்கின்றனர். இதுதவிர பட்டாசு 30 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே பலகாரத்துக்கு தேவையான பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மட்டுமின்றி பட்டாசு, ஆடைகள் என அனைத்தும் விலை உயர்ந்து விட்டன.

மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதால் முன்கூட்டியே பொருட்களை வாங்குவதை அறிந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விலை உயர்வு கூடுதல் செலவாகி அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு பெரும் சுமையாகி பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்படுத்த நடவடிக்கை

தீபாவளி கொண்டாட்டத்துக்காக வேறுவழியின்றி அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். தீபாவளி உள்பட பண்டிகை காலத்தின் போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து வியாபாரி, பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

குமார் (நல்லாம்பட்டி பிரிவு) :- பண்டிகை காலம் என்றாலே பலகாரங்களை வீட்டிலேயே செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுப்போம். ஆனால் பருப்பு வகைகள், எண்ணெய் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் தீபாவளி பண்டிகைக்கு சாதாரண மக்கள் வீடுகளில் பலகாரங்கள் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே கடைகளில் குறைந்த அளவில் பாலகாரங்களை வாங்கி சாப்பிட்டு, ஆரோக்கிய குறைபாடு உருவாகும். இதுதவிர பட்டாசு, ஆடைகளின் விலையும் அதிகரித்து இருப்பதால், தீபாவளி செலவு இருமடங்காகி இருக்கிறது.

கவிதா (திண்டுக்கல் கருணாநிதிநகர்) :- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் போதும்என்ற நிலை இருந்தது. தற்போது பட்டாசு, புத்தாடைகள், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு பட்டாசு, ஆடைகள், பலகார பொருட்கள் என அனைத்தின் விலையும் உயர்ந்து விட்டது. அதிலும் தீபாவளி நேரத்தில் பொருட்களின் விலை உயர்வது நடுத்தர, சாதாரண மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

பிரகாசம் (அமரபூண்டி):- தீபாவளி பண்டிகை என்றாலே எண்ணெய் குளியலும், பலகாரம் தயார் செய்வதும் தொன்றுதொட்டு பின்பற்றி வரும் வழக்கம். இதேபோல் பட்டாசு வெடிப்பது முக்கிய அம்சமாக உள்ளது. இதையொட்டி மக்கள் கடைகளுக்கு சென்று அதற்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர். ஆனால் பண்டிகை காலத்தில் பொருட்களின் விலை உயர்ந்து விடுகிறது. எனினும் தவிர்க்க முடியாமல் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்குகிறோம். பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 சதவீதம் உயர்வு

வெங்கடாசலம் (வியாபாரி, பழனி) :- தீபாவளி, பொங்கல், திருக்கார்த்திகை என பண்டிகை காலங்களில் பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்ந்து விடுகிறது. பண்டிகை காலங்களில் அதிக தேவை, தட்டுப்பாடு காரணமாக விலை உயர்கிறது. பலகாரங்களை கடைகளில் வாங்கும் பழக்கம் இருந்தாலும், வீடுகளில் பலகாரம் தயாரிக்கும் பழக்கம் இன்றும் இருக்கிறது. அந்த வகையில் தீபாவளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பே பொருட்களை வாங்க தொடங்கிவிட்டனர். ஜவுளிக்கடைகளுக்கு மக்கள் சென்று ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்