டாஸ்மாக் கடை அருகே மர்மான முறையில் உயிரிழந்தவரின் சாவில் திடீர் திருப்பம்

பணத் தகராறில் நண்பர்களே கல்லால் தாக்கி கொலை செய்தது போலீசாரின் புலன் விசாரணையில் தெரியவந்தது.

Update: 2022-06-29 07:14 GMT

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரம் தலையம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 42).இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி என்கிற மனைவி உள்ளார். குடிப்பழக்கத்திற்கு ஆளாகிய வேலுச்சாமியை விட்டு அவரது மனைவி பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று,12 வருடங்கள் ஆகிறது என்று கூறப்படுகிறது.

கட்டிய மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த வேலுச்சாமி முன்னை விட அதிகமாக குடிக்கத் தொடங்கியதாகத் தெரிகிறது. வேலை ஏதும் செய்யாமல் தலையம்பாளையத்திலுள்ள தனது பெற்றோர் பொன்னுசாமி- பழனியம்மாள் ஆகியோரின் ஆதரவில் வேலுச்சாமி இருந்து வந்தாராம்.

இந்நிலையில் கடந்த 23-ம் தேதியன்று மது அருந்துவதற்காக வேலுச்சாமி சீனாபுரம் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.அப்போது அவரது நண்பர்களான வரதராஜன்(50), சண்முகசுந்தரம் (36), மெரூன்(23) ஆகிய மூவரும், பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வேலுச்சாமியிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் 3 பேரும், கையில் கிடைத்த கல்லை கொண்டு வேலுச்சாமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வேலுச்சாமி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பிறகு அந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த வேலுச்சாமியின் அக்கா சித்ரா (44) என்பவர், வேலுச்சாமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவான கொலை குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந் நிலையில், குற்றவாளிகள் மூவரும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து உஷாரான போலீசார் பழனிக்கு விரைந்து சென்று மலை அடி வாரத்தில் நின்று கொண்டிருந்த அந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், வழக்கை விசாரித்த மாஜிஸ்டிரேட் சபினா, அவர்கள் மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மூன்று பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்