சரக்கு வேன்-கார் மோதல்; டிரைவர் பலி

அன்னவாசல் அருகே சரக்கு வேன்-கார் மோதியதில் டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-10 18:41 GMT

அன்னவாசல்:

டிரைவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. டிரைவரான இவர், சரக்கு வேனில் காய்கறி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று காலை திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே ராமநாதபுரத்தை சேர்ந்த காஜாஉசேன், சையது இப்ராஹிம், சையது அபுதாஹிர், ஷிகானி உள்ளிட்ட 4 பேரும் ஒரு காரில் திருச்சி விமான நிலையம் செல்வதற்காக வந்து கொண்டிருந்தனர்.

அன்னவாசல் அருகே நெடுஞ்சேரி திருச்சி-புதுக்கோட்டை சாலையில் வந்தபோது சரக்கு வேனும், காரும் எதிர்பாராதவிதமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் சரக்கு வேன் டிரைவர் செல்லமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.

4 பேர் படுகாயம்

காரில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த காஜாஉசேன், சையது இப்ராஹிம், சையதுஅபுதாஹிர், ஷிகானி உள்ளிட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வெள்ளனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் செல்லமுத்துவின் உடலை எடுக்க உடனடியாக ஆம்புலன்ஸ் வராததால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக செல்லமுத்துவின் உடல் சாலை ஓரத்திலேயே கிடந்தது.

பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செல்லமுத்துவின் உடலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்