சரக்கு ஆட்டோ மோதி அண்ணன்-தம்பி பலி

வேப்பந்தட்டை அருகே சரக்கு ஆட்டோ மோதி சர்க்கரை ஆலை ஊழியர்களான அண்ணன்-தம்பி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-06 17:39 GMT

வேப்பந்தட்டை

விபத்து

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள உடும்பியத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தவர் பாண்டியன் (வயது 38). இவரது அண்ணன் சசிகுமார் (42). அதே சர்க்கரை ஆலையில் ஆபரேட்டராக பணிபுரிந்தார். இவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம், குன்னியூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

நேற்று காலை குன்னியூரிலிருந்து பாண்டியனும், சசிகுமாரும் ஒரு மோட்டார் சைக்கிளில் உடும்பியம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பாண்டியன் ஓட்டியுள்ளார். அப்போது பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் நோக்கி சரக்கு ஆட்டோ ஒன்று சென்றது. சர்க்கரை ஆலை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், சரக்கு ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த சசிகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அண்ணன், தம்பி பலி

படுகாயமடைந்த நிலையில் பாண்டியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணனை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி இருவரும் விபத்தில் இறந்த சம்பவம் சர்க்கரை ஆலை ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்