விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதன்கிழமை நான்கு இடங்களில் அறிவிக்கப்பட்டு இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர்- பாளையங்கோட்டை நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி தரமில்லாமல் முறைகேடாக கால தாமதமாக நடைபெற்று வருவதாகவும், நெடுஞ்சாலை விரிவாக்க பணியை விரைவாக அமைக்க கோரியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரி, குரும்பூர், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் இன்று (புதன்கிழமை) நடத்தபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில், உதவி கலெக்டர் புகாரி தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார்கள் சுவாமிநாதன், கண்ணன், பொறியாளர் ஸ்ரீனிவாசன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி, செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை தரமானதாக இல்லாததால், அவற்றை மாற்றி தரமான சாலையாக அமைக்க வேண்டும். நில எடுப்பு பணியினை விரைந்து முடிக்க வேண்டும். சாலை அமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை விரைந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடுவது எனவும், மீண்டும் வருகிற 29-ந் தேதி திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.