மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி
கடற்படை, கடலோர காவல்படையில் சேர மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கடற்படை, கடலோர காவல்படையில் சேர மீனவர்களின் குழந்தைகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பயிற்சி வகுப்பு
தமிழக மீனவர்களின் வாரிசுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கடற்படையில் நவிக் (பொது) மற்றும் மாலுமி பணிகளிலும், இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக (வழிகாட்டுதல்) இலவச சிறப்புப்பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அதன்படி முதல் கட்டமாக கடந்த ஆண்டு 90 நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தன. 2-வது கட்டமாக அடுத்த மாதம் (பிப்ரவரி) பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
அதன்படி கடலோர பாதுகாப்பு குழுமத்தால் நடத்தப்பட உள்ள இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியுள்ள மீனவர் வாரிசுகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்படி விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட கடலோர மாவட்ட மீன்வளத்துறை அலுவலகங்களில் இருந்தும், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர், ரேஷன் கடைகள், மீனவ கிராம கூட்டுறவு சங்கங்கள் ஆகிய இடங்களில் இருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
மேலும், https://drive.google.com/drive/folders/1I8xcdsoXM9RH-O--ySMT2wJCoEXtWskh?usp= sharing என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) பிற்பகுதியில் தொடங்கி தொடர்ந்து மூன்று மாத காலத்துக்கு கடலுார், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இலவசமாக வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கடலோர மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நபர்கள் அருகில் உள்ள பயிற்சி மையத்துக்கு அனுப்பப்படுவர். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி கையேடுகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பயிற்சியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் தலா ரூ.1000 வீதம், பயிற்சிக்கால ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
எனவே, 12-ம் வகுப்புத் தேர்வில் மொத்த பாடங்களின் கூட்டுத்தொகையில் 50 சதவீதத்துக்கு மேலும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் தனித்தனியாக் 50 சதவீதத்துக்கு மேலும் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள, உரிய உடற்கூறு தகுதிகளும் பெற்றுள்ள மீனவர்களின் வாரிசுகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.