தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திருப்பூர்
தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் திருப்பூர்
திருப்பூர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றதால் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.
பொங்கல் விடுமுறை
திருப்பூர் என்றால் நம் ஞாபகத்துக்கு வருவது பனியன் தொழில்தான். ஏனென்றால் திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியம் நிறுவனங்கள் உள்ளன. அதனால் திருப்பூர் மாநகர் 'பின்னலாடை தொழில் நகரம்' என்றும், 'டாலர் சிட்டி' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய திருப்பூர் மாநகரில் உள்ளூர், வெளியூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தவரும் என லட்சக்கணக்கான பேர் வேலைநிமித்தமாக இங்கு தங்கி, வசித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிைகயை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் கடந்த 14-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது பனியன் நிறுவன தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் பரபரப்பாக காணப்படும் திருப்பூர் மாநகரம் தற்போது பொலிவு இழந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
மக்கள் கூட்டம் குறைவு
குறிப்பாக ஆடை விற்பனைக்கு பெயர் போன இடமான காதர்பேட்டையில் 1000-க்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டு உள்ளது.
பண்டிகை காலம், ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் இடங்களான கடைவீதி, புதுமார்க்கெட் வீதி, திருப்பூர் மாநகராட்சி வெள்ளிவிழா பூங்கா போன்ற பல்வேறு பகுதிகளில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ெதாழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு சென்றதால் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்ததால் குமரன் ரோடு, பி.என்.ரோடு போன்ற முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்தும் பெருமளவில் குறைந்துள்ளது.
வாகன நிறுத்துமிடம் நிரம்பியது
அதேபோல் சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் செல்வதற்கு பயன்படுத்திவிட்டு, அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் பண்டிகை காலங்களில் வாகன நிறுத்தம் பகுதி முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்படும். தற்போதும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற தொழிலாளர்கள் தங்கள் வாகனங்களை வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதன்காரணமாக தற்போது வாகன நிறுத்தங்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் நிரம்பி வழிகிறது. பண்டிகை முடிந்து தொழிலாளர்கள் திரும்பும்போதுதான் வாகன நிறுத்தங்களிலிருந்து வாகனங்கள் எண்ணிக்ைக குறையும். அப்போது மீண்டும் திருப்பூர் மாநகரம் பரபரப்பாக இயங்க தொடங்கும்.