இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்
இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
காட்பாடியில் உள்ள இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.சங்கர் தலைமையில் நடந்தது.
வேலூர் மாவட்டம், காட்பாடி காந்திநகரில் இந்திரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளது. இங்கு சி.டி. ஸ்கேன், நியூக்ளியர் ஸ்கேன், 24 மணி நேர மருத்துவர்கள் சேவை, நவீன வசதிகள் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் ஆகியவை உள்ளது. இங்கு இலவச மருத்துவ அறுவை சிகிச்சை முகாம் நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. முகாமிற்கு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பி.சங்கர் தலைமை தாங்கி நோயாளிகளை பரிசோதனை செய்து முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் இலவசமாக அறுவை சிகிச்சை ஆலோசனை, மகளிருக்கான மருத்துவ ஆலோசனை, இருதயம், சிறுநீரகத்தில் ஏற்படும் கோளாறுகள், டயாலிசிஸ் சிகிச்சை, தோல் வியாதி ஆகியவற்றுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தேவைப்பட்டவர்களுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், இந்த திட்டத்தில் இல்லாதவர்கள் சலுகை கட்டணத்திலும் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில் மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக பிரச்சினைகள், தோல் வியாதிகள் ஆகியவற்றுக்கு டாக்டர்கள் மகப்பேறு நிபுணர் லதா லட்சுமி, பொது அறுவை சிகிச்சை நிபுணர் கரண்சங்கர், அவசர சிகிச்சை பிரிவு டாக்டர் சீனிவாசன், தோல் மருத்துவ சிகிச்சை நிபுணர் ரூபன் ஜேசுதாஸ், சிறுநீரக சிகிச்சை நிபுணர் தேஜஸ்வி ஆகியோர் கலந்து கொண்டு நோயாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.