நகராட்சி ஆண்கள் பள்ளியில் 15-ந்தேதி நடக்கிறது-மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்-பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வருகிற 15-ந்தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து பேரணியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி
பொள்ளாச்சி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நேற்று பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதி நகராட்சி பள்ளியில் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை வட்டார கல்வி அலுவலர்கள் பூம்பாவை, குளோரி மேரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் மேற்பார்வையாளர் காயத்ரி, பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரி மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
மருத்துவ பரிசோதனைகள்
ஒருங்கிணைந்த பள்ளி, கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொள்ளாச்சி வட்டார வள மையம் அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மையம் வெங்கட்ரமணன் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சார்பில் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறளானி மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் வருகிற 15-ந்தேதி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் தேசிய அடையாள அட்டையை புதுப்பித்தல், மாதாந்திர பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகைக்கு பதிவு செய்தல் மற்றும் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த முகாமில் கலந்துகொள்ளும் பூஜ்ஜியம் முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றின் தலா 2 நகல்களும், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
----
Reporter : V.MURUGESAN_Staff Reporter Location : Coimbatore - Pollachi - POLLACHI