நஞ்சப்பசத்திரத்தில் இலவச மருத்துவ முகாம்
வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
குன்னூர்
குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந் தேதி ராணுவ ஹெலிகாப்டர் பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இதைதொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.அருண் ஆய்வு செய்த போது, விபத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய நஞ்சப்பசத்திரம் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் கிராம மக்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டி, ஓராண்டு மாதந்தோறும் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரி மூலம் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி ராணுவ ஆஸ்பத்திரி சார்பில், இலவச மருத்துவ முகாம் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில் ராணுவ ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி, செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ சோதனை மேற்கொண்டனர். சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்கள் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.