திருத்தணியில் அரசு பணி போட்டி தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையம்

திருத்தணியில் அரசு பணி போட்டி தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

Update: 2023-04-18 11:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள சுய உதவி குழுக்களுக்கான வணிக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக அரசு பணிகளில் மாவட்ட இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் விதமாகவும், அரசு பணிகள் மற்றும் வங்கி பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ள "கற்போர் வட்டம்" எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு "கற்போர் வட்டம்" எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை திறந்து வைத்து மாணவ- மாணவிகளோடு கலந்துரையாடி இலவச பயிற்சி கையேடுகளை வழங்கினர்.

இதனை தொடர்ந்து, திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட தரணிவராகபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நூலகத்தில் "கற்போர் வட்டம்" எனும் இலவச வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப், சப் - கலெக்டர் (பயிற்சி) கேத்தரின் சரண்யா, திருத்தணி ஒன்றிய குழு தலைவர் தங்கதனம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், ராஜேந்திர பாபு, வருவாய் ஆய்வாளர் கமல், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்