ஆசிரியர் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஆசிரியர் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
இலவச பயிற்சி வகுப்புகள்
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய 2023-ம் ஆண்டு திட்ட நிரலில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு 6,553 காலிப்பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 3,587 காலிப்பணியிடங்களுக்கும் போட்டித்தேர்வு நடப்பு ஆண்டில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தேர்வுகளுக்குமான பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் ஆகிய பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் இந்த 2 தேர்விற்கும் ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்போட்டித்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கப்பட உள்ளது.
கலந்து கொள்ள விருப்பமுள்ள...
தொலைதூரத்தில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் அலுவலகத்திற்கு நேரில் வர இயலாதவர்கள், அரசுப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி பெற்று பயனடையும் வகையில், கல்வி தொலைக்காட்சியின் மூலமாக பயிற்சி வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி அலைவரிசையில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மறு ஒளிபரப்பு இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிப்பரப்பாகும். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்திலும், TncareerServicesEmployment என்ற யு-டியூப் சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வரவும். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 04324- 223555 என்ற எண்ணில் (அ) studycirclekarur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.