நாலுமாவடியில்இலவச புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்
நாலுமாவடியில்இலவச புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடந்தது.
தென்திருப்பேரை:
நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனை, மதுரை குரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நாலுமாவடியில் நேற்று நடந்தது. புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனையில் நடந்த முகாமுக்கு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அன்புராஜன் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி வட்டார மருத்துவ அலுவலர் பாத்திபன் முன்னிலை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் முகாமை தொடங்கி வைத்து பேசினார். முகாமில் நோயாளிகளுக்கு மேமோகிராம், ரத்த சர்க்கரை, ஈ.சி.ஜி, எக்கோ கார்டியோகிராம், பிஏபிசமீர், எப்என்ஏசி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் நாலுமாவடி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.