அவசரகால உதவிக்கு இலவச ஆட்டோ

அவசரகால உதவிக்கு இலவச ஆட்டோ சேவையை நந்தகுமார் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

Update: 2022-09-08 18:40 GMT

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கநல்லூர் ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சுதாகர், கனகராஜ், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.வெங்கடேசன், ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‌மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் கலந்துகொண்டு நிழற்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் இ சேவை மையம் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்தார்.

தேர்தலின்போது நந்தகுமார் இந்தப்பகுதியில் உள்ளவர்கள் அவசர காலத்திற்கு உடனடியாக மருத்துவமனை செல்வதற்கு ஒரு ஆட்டோ இலவசமாக வழங்கப்படும் என நந்தகுமார் எம்.எல்.ஏ. வாக்குறுதிகொடுத்தார். அதன்படி கெங்கநல்லூர் ஊராட்சியில் அவசரகால உதவிக்கு இலவசமாக ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அவரே ஆட்டோவை ஓட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், அவசர காலத்திற்கு தேவைப்படுவோர் ஊராட்சி மன்ற தலைவரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டால் பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்கு ஆட்டோ செல்லும் என அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்