நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக தருவதாக மோசடி
நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பண மோசடி
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். விராலிமலை தாலுகா தேங்காய்தின்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ''தனியார் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் குறிப்பிட்ட தவணை காலத்திற்கு பின் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என எங்கள் ஊரை சேர்ந்த ஒரு தம்பதியிடம் பணத்தை செலுத்தி வந்தோம்.
தங்களது வசதிக்கேற்ப செலுத்தி வந்த நிலையில் தவணை காலம் முடிந்த பின்பும் பணத்தை தராமல் மோசடி செய்தனர். மேலும் பணத்தை திரும்பி கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறும், மொத்தம் 47 பேரிடம் ரூ.17 லட்சத்து 21 ஆயிரத்து 100 மோசடி செய்ததாக மனுவில் கூறியிருந்தனர். மேலும் பணத்தை பெற்று மோசடி செய்த தம்பதி தேசிய நெடுஞ்சாலைதுறையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
குளத்தில் ஆக்கிரமிப்பு
அரிமளம் அருகே கீரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தங்கள் பகுதியில் கீரணிகண்மாய் குளத்தில் இருந்து நீர்ப்பாசனம் செய்து வருவதாகவும், அதில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து ஆழ்துளை கிணறு அமைக்கவும், வரத்து வாரியை ஆக்கிரமிப்பு செய்து பாதை அமைக்கவும் ஏற்பாடு செய்வதாகவும், அதனை தடுத்து நிறுத்த கோரியும், விவசாயிகளின் போராட்டமாக மாறுவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தியிருந்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
பள்ளி கட்டிடம் சேதம்
ஆவுடையார்கோவில் ஒன்றியம் செங்கானம் ஊராட்சியில் தென்னமாரி தொடக்கப்பள்ளியில் கட்டிடம் மிகவும் சேதமடைந்திருப்பதாகவும், மழை காலத்தில் மழை நீர் ஒழுகுவதாகவும், கட்டிடத்தை சீரமைக்க கோரி பொதுமக்கள் சார்பில் மனு அளித்தனர்.
394 மனுக்கள்
கூட்டத்தில் மொத்தம் 394 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.8,500 மதிப்பிலான சக்கர நாற்காலியும், தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலம் 4 நபர்களுக்கு 11, 12 -ம் வகுப்புகள் மற்றும் பட்டப்படிப்பு கல்வி உதவித் தொகைகளாக தலா ரூ.1,500 வீதம் ரூ.6,000 மதிப்பிலான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.