ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் மோசடி

கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிய கார்டை எடுத்து தருவதாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரத்தை மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-04-05 18:45 GMT

கோவை

கோவையில் ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிய கார்டை எடுத்து தருவதாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரத்தை மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓட்டல் உரிமையாளர்

கோவை ரெட்பீல்டு சாலையை சேர்ந்தவர் ஜான் சேவியர் (வயது 52), ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக புலியகுளம் தாமு நகர் பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.14 ஆயிரத்தை எடுத்தார். இதையடுத்து அவர் தனது கார்டை எடுக்க முயன்றபோது, கார்டு ஏ.டி.எம். எந்திரத்தில் சிக்கிக்கொண்டது.

இதனை ஏ.டி.எம். மையத்தின் வெளியே நின்ற நபர் ஒருவர் கவனித்தார். உடனே அவர் உள்ளே சென்று, நான் எடுத்துத்தருகிறேன் என்று கூறி அந்த கார்டை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

ரூ.70 ஆயிரம் மோசடி

உடனே அந்த நபர் ஜான் சேவியரிடம், உங்களது ஏ.டி.எம். கார்டின் ரகசிய எண்ணை டைப் செய்தால்தான் கார்டை வெளியே எடுக்க முடியும், எனவே ரகசிய எண்ணை சொல்லுங்கள் என்று கூறினார். இதனால் ஜான்சேவியரும் தனது கார்டின் ரகசிய எண்ணை அந்த நபரிடம் சொன்னார்.

சிறிது நேரத்தில் கார்டை வெளியே எடுத்த அந்த நபர், ஜான் சேவியரிடம் ஒரு கார்டை கொடுத்துவிட்டு, வெளியே சென்றார். ஜான் சேவியரும் தனது வீட்டுக்கு சென்றார்.இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஜான் சேவியரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜான் சேவியர், உடனே தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது வங்கி ஊழியர்கள், ஜான் சேவியரின் கணக்கை ஆய்வு செய்தபோது, ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அப்போதுதான் அவர் தனது ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது, அது தனது கார்டு இல்லை என்பதும், ஏ.டி.எம்.மில் சிக்கிய கார்டை எடுத்துத்தருவதாக கூறிய மர்ம நபர், அந்த கார்டுக்கு பதில் வேறு கார்டை மாற்றிக்கொடுத்துவிட்டு, அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரத்தை எடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்