திருத்தணியில் கவரிங் நகையை அடமானம் வைத்து ரூ.65 ஆயிரம் மோசடி

திருத்தணியில் கவரிங் நகையை அடமானம் வைத்து ரூ.65 ஆயிரம் மோசடி செய்த இளம்பெண் காரில் தப்பிச்செல்ல முயன்றபோது அவரிடம் இருந்து கடை உரிமையாளர் பணத்தை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-05-15 04:48 GMT

அடகு கடை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள திரையரங்கரம் அருகே அசோக்குமார் (வயது 38) என்பவர் கனிஷ்கா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இளம்பெண் ஒருவர் தங்க சங்கிலியை அடகு வைக்க வந்துள்ளார். பின்னர் 19 கிராம் எடைகொண்ட நகையை அடமானம் வைத்துக் கொண்டு ரூ.65 ஆயிரம் பணத்தை கடை உரிமையாளரிடம் இளம்பெண் பெற்றுக் கொண்டு கடையில் இருந்து புறப்பட்டார். இதையடுத்து, சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் அசோக்குமார் அந்தப் பெண் அடமானம் வைத்து சென்ற சங்கிலியை பரிசோதனை செய்து பார்த்தபோது, அது கவரிங் நகை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

பெண்ணை துரத்தினார்

உடனடியாக கடையில் இருந்து வெளியே ஓடிவந்த அசோக்குமார் கவரிங் நகை வைத்து பணம் பெற்றுச் சென்ற பெண் கடை அருகில் நிற்கவைக்கப்பட்டிருந்த காரில் ஏறுவதைக் கண்டு அவரை துரத்தி சென்றார். அதற்குள் கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற நிலையில் காரை துரத்தி பிடித்து தொங்கிய படி சென்ற அசோக்குமார், அந்த பெண்ணின் கையில் இருந்த பையை பறித்துக் கொண்டு கீழே விழுந்தார். பின்னர் கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட்டது. கீழே விழுந்ததில் அசோக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீட்கப்பட்ட அந்த பையில் ரூ.65 ஆயிரம் மற்றும் 4 ஆதார் கார்டுகள் இருந்தது.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து கடை உரிமையாளர் அசோக்குமார் திருத்தணி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கவரிங் நகை அடகு வைத்து பணம் பெற முயன்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அடகு கடையில் கவரிங் நகை கொடுத்து நூதன முறையில் பெண் ஒருவர் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்