நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி

ரத்தினபுரியில் போலி தங்க நகையை கொடுத்து நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-10 19:45 GMT

ரத்தினபுரி

ரத்தினபுரியில் போலி தங்க நகையை கொடுத்து நிதி நிறுவன அதிபரிடம் ரூ.58 ஆயிரம் மோசடி செய்த தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.

நிதி நிறுவன அதிபர்

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் விசு(வயது 22). நிதி நிறுவன அதிபர்.

இவரிடம், கோவைப்புதூர் எம்.ஜி.ஆர். ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி(65) மற்றும் அவருடைய மகன் விவேக் (35) ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள வங்கியில் தங்க நகையை அடமானம் வைத்துள்ளோம், அதனை மீட்க பணம் வேண்டும் என்று கேட்டனர்.

இதையடுத்து அவர்களுடன் அந்த வங்கிக்கு சென்ற விசு, தங்க நகையை ரூ.68 ஆயிரம் கொடுத்து மீட்டு கொடுத்தார். பின்னர் அந்த தங்க நகையை விசுவிடம் அவர்கள் கொடுத்து விட்டு ரூ.58 ஆயிரத்தை வாங்கி சென்றனர்.

போலி தங்க நகை

இதைத்தொடர்ந்து விசு, அவர்கள் கொடுத்த தங்க நகையை வங்கியில் அடகு வைக்க சென்றார்.

அப்போது அவர்கள் கொடுத்தது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகை என்பது தெரியவந்தது. தங்க நகையை வாங்கி விட்டு அதற்கு பதிலாக போலி நகையை அவர்கள் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த விசு, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி நகையை கொடுத்து பண மோசடியில் ஈடுபட்ட பாலதண்டபாணி, அவரது மகன் விவேக்கை கைது செய்தனர்.

மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்