நகைக்கடை பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
கோவையில் அதிக வருமானம் கிடைக்கும் என்றுக்கூறி நகைக்கடை பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் அதிக வருமானம் கிடைக்கும் என்றுக்கூறி நகைக்கடை பெண் ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகைக்கடை ஊழியர்
கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் அப்துல் ரஜிம். இவருடைய மனைவி மும்தாஜ் (வயது 30). இவர் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கு நகை பட்டறையில் வேலை செய்து வரும் ஆனந்த் பாபு என்பவர் அறிமுகம் ஆனார்.
அவர் மும்தாஜிடம், எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார். அவரிடம் பணத்தை கொடுத்தால், அவர் அந்த பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்வார். அதில் நல்ல வருவாய் கிடைக்கும் என்பதால் மாதந்தோறும் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி உள்ளார்.
ரூ.9 லட்சம் நகை-பணம்
இதை நம்பிய மும்தாஜ், தன்னிடம் இருந்த ரூ.6 லட்சம் மற்றும் 8 பவுன் நகையை ஆனந்த பாபுவிடம் கொடுத்தார். அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் பணம், நகையை பெற்றுக்கொண்ட பின்னர் அவருக்கு மாதந்தோறும் எந்த பணமும் கொடுக்கப்படவில்லை.
இதையடுத்து மும்தாஜ், ஆனந்த் பாபுவிடம் கேட்டதற்கு அவர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. தொடர்ந்து கேட்டதற்கு ஆன்லைனில் முதலீடு செய்துவிட்டோம். ஆனால் ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து பணம் எதுவும் வரவில்லை, பணம் வந்ததும் கொடுத்து விடுவதாக தெரிவித்துள்ளார்.
மோசடி
இருந்தபோதிலும் மும்தாஜ் கொடுத்த பணம், நகை கேட்கும்போதெல்லாம் இதே பதிலைதான் ஆனந்த் பாபு தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மும்தாஜ், தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்து, இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஆனந்த்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.