குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி 2 பேரிடம் நூதன முறையில் ரூ.8¼ லட்சம் மோசடி; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி 2 பேரிடம் நூதன முறையில் ரூ.8¼ லட்சத்தை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பணம் மோசடி
விழுப்புரம் அருகே உள்ள மோட்சகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் மூலம் தொடர்புகொண்டு பேசிய நபர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதனுள் வரும் வீடியோவை லைக் செய்து ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை திருப்பித்தரப்படும் எனக்கூறினார்.
இதையடுத்து ராதாகிருஷ்ணன், அந்த நபர் கூறியவாறு செய்து ரூ.150-ஐ தன்னுடைய வங்கி கணக்கில் பெற்றார். பின்னர் டெலிகிராம் ஐடி மூலம் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்டு பேசிய நபர், பகுதிநேர வேலையாக சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய ராதாகிருஷ்ணன், 6 தவணைகளாக தனது வங்கி கணக்கு மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 214-ஐ அனுப்பி வைத்தார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் வானூர் தாலுகா நடுக்குப்பத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண், தனது இன்ஸ்டாகிராமை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது டெலிகிராம் ஐடி மூலம் அவரை தொடர்புகொண்ட நபர், ஒரு லிங்கை அனுப்பி வைத்து அந்த லிங்கினுள் சென்று சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார்.
இதை நம்பிய அப்பெண், தனது வங்கி கணக்கில் இருந்து 10 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் அப்பெண்ணுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணன் மற்றும் அப்பெண், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.