பேராசிரியரிடம் ரூ.7 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை இருப்பதாக கூறி வேலூர் பேராசிரியரிடம் ரூ.7 லட்சத்தை ஆன்லைன் மூலம் மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.
பேராசிரியர்
திரிபுரா மாநிலம் அகர்தலா, ராம்நகரை சேர்ந்தவர் கவுதம்மஜூம்தர். இவர் காட்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மாதம் வாட்ஸ் அப் எண்ணுக்கு பகுதிநேர வேலை தொடர்பாக குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த லிங்கில் சென்றபோது, அதில் கணக்கு ஒன்றை பதிவு செய்ய வேண்டும் என அவருக்கு மர்மநபர்கள் அறிவுறுத்தினர். அதை நம்பிய அவரும் பதிவு செய்து கொண்டார். பின்னர் டெலிகிராமில் தொடர்பு கொண்ட அவர்கள் அதன் மூலம் சில பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பணி முடிக்கும்போது குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தினால் செலுத்தும் தொகையில் இருந்து கூடுதலாக பணம் தரப்படும் என்று தெரிவித்தனர்.
ரூ.7 லட்சம் மோசடி
அதன்படி பேராசிரியர் பணத்தை செலுத்தி அவர்கள் கூறிய பணியை செய்து வந்தார். ஒருகட்டத்தில் ரூ.6 லட்சத்து 93 ஆயிரம் வரை பணத்தை செலுத்தினார். அவர் செலுத்திய தொகை மற்றும் அதனுடன் கூடுதல் தொகை சேர்ந்து ஆன்லைன் லிங்கில் உள்ள அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் அந்த கணக்கில் இருந்து பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை.
பின்னர் அவர் அந்த மர்மநபர்களை தொடர்பு கொண்டு பணத்தை எடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார். பணத்தை எடுக்க வேண்டும் என்றால் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.